வெளி மாவட்டத்திற்கு கடத்த முயன்ற 524 மதுபாட்டில்கள் பறிமுதல் 9 பேர் கைது
வெளி மாவட்டத்திற்கு கடத்த முயன்ற 524 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முசிறி
கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் திருச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகிலுள்ள நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்படாததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் நாமக்கல், கரூர் பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் அதிகஅளவில் திருச்சி மாவட்ட எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்து மது வாங்கி கடத்தி செல்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், மோகன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது வாங்கி கடத்தி சென்ற நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்திவேலூர், தேவனாங்குறிச்சி பகுதிகளை சேர்ந்த மகாலிங்கம் (வயது 29), நாகராஜ் (30), வஜ்ரவேலு (32), பாபு (25), அருண் (28), ஆறுமுகம் (40), செல்வம் (42), குணசேகரன் (43), கார்த்திக் (19) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 524 மது பாட்டில்களும், மது கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் ஆகிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story