சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடித்த வக்கீல் உள்பட 5 பேர் கைது
திண்டுக்கல் சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடித்த வழக்கில் வக்கீல் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடித்த வழக்கில் வக்கீல் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நகைகள் கொள்ளை
திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த காமாட்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 10-ந்தேதி இரவு சிவக்குமாரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்குணசேகர், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
5 பேர் கைது
இந்தநிலையில் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் பள்ளபட்டி அருகே தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர்கள் மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபுத்திரன் (வயது 34), சாமியார்தோட்டத்தை சேர்ந்த சாமிநாதன் (34) என்பதும், சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் அவரது நண்பர்களான திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டை சேர்ந்த வக்கீல் வினோத் (34), நாகம்மாள் தெருவை சேர்ந்த ஹரிபிரசாத் (25), காமாட்சிநகரை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ரமேஷ்ராஜா (34) ஆகியோரும் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இந்திராநகரில் பதுங்கியிருந்த வினோத், ஹரிபிரசாத், ரமேஷ்ராஜா மற்றும் வாகன சோதனையில் பிடிபட்ட வீரபுத்திரன், சாமிநாதன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story