குமரியில் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி


குமரியில் தாலுகா அலுவலகங்களில்  ஜமாபந்தி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Jun 2021 2:25 AM IST (Updated: 23 Jun 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. திருவட்டார் தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. திருவட்டார் தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார். 
ஜமாபந்தி நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 தாலுகாக்களுக்கு 1430-ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நேற்று தொடங்கியது. திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அப்போது, தாலுகாவுக்கு உட்பட்ட மேக்கோடு, அருவிக்கரை, குமரன்குடி உள்பட 13 வருவாய் கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் கலெக்டரால் தணிக்கை செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக 8 மனுக்கள், நேரடியாக 37 மனுக்கள் என 45 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உடனடி தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு, கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் திருவட்டார் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாவது நாள் நிகழ்ச்சி
கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் சப்-கலெக்டர் மரக்கன்றுகள் நட்டார்.
இதுபோல், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆணையர் (கலால்) சங்கரலிங்கம், தோவாளையில்  மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், விளவங்கோட்டில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி 6 தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

Next Story