சேரம்பாடி அருகே குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகை


சேரம்பாடி அருகே குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Jun 2021 5:18 PM GMT (Updated: 23 Jun 2021 5:18 PM GMT)

சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட பகுதியில் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன.

பந்தலூர்

சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட பகுதியில்  குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் முற்றுகை

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1-ல் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து, தொழிலாளர்களின் குடியிருப்புகளை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இதனால் அந்த பகுதியில் தொழிலாளர்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் குட்டிகளுடன் 11 காட்டு யானைகள் புகுந்தன. 

பின்னர் இந்த யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் அவசர தேவைக்கு கூட வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர். 

தொழிலாளர்கள் பீதி

தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் அருகே உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் முகாமிட்டன. இதனால் காலையில் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் யானைகளை கண்டு ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து சென்ற யானைகள் தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள மலைபகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர்.

விரட்ட வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1 குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது குடியிருப்பு அருகே உள்ள மலைப்பகுதியில் 11 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story