வண்டலூர், கலெக்டர் ஆய்வு


வண்டலூர், கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Jun 2021 1:16 AM GMT (Updated: 24 Jun 2021 1:16 AM GMT)

வண்டலூர் தாலுகா அலுவலகம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது.

வண்டலூர், 

2019-ம் ஆண்டு புதிய மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. அன்றைய தினமே வண்டலூர் தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டது. தற்போது வண்டலூர் தாலுகா அலுவலகம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. இதனையடுத்து வண்டலூர் பாபா கோவில் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் 34 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வண்டலூர் தாலுகா புதிய அலுவலகம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆனபிறகும், இன்னும் தாலுகா அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரிடம் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆா். ராகுல்நாத் வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவரங்களை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

உடனே இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து உடனடியாக வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் ஆர்.டி.ஒ. ரவிச்ந்திரன், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.


Next Story