கை, கால்களை கட்டிப்போட்டு பெண் உயிருடன் எரித்துக்கொலை மாநகராட்சி ஊழியர் கைது
கை, கால்களை கட்டிப்போட்டு பெண்ணை உயிருடன் எரித்துக்கொலை செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை நொளம்பூர் பைபாஸ் சர்வீஸ் சாலையில் உள்ள காலி இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் எரிந்து கொண்டிருப்பதாக நொளம்பூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, எரிந்த நிலையில் கிடந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் உடல் எரிந்து கொண்டிருந்த இடத்தின் அருகில் கிடந்த ஒரு பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் இறந்து கிடந்த பெண் வானகரம், சக்தி சாய்ராம் நகரைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி ரேவதி (வயது 35) என்பதும், இவர், சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
ரேவதிக்கும், அவருடன் அதே மண்டல அலுவலகத்தில் குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோ டிரைவராக பணியாற்றி வரும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திம்மப்பா(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
கடந்த 16-ந்தேதி திம்மப்பா கேட்டதால் ரேவதி தனது 5 பவுன் தங்க சங்கிலியை அடமானம் வைக்க கழற்றி கொடுத்தார். அதன்பிறகு 22-ந்தேதி நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள இந்த காலி இடத்தில் ரேவதியும், திம்மப்பாவும் தனிமையில் சந்தித்து பேசினர்.
அப்போது ரேவதி, தான் அடமானம் வைக்க கொடுத்த 5 பவுன் தங்க சங்கிலியை மீட்டு தரும்படி கேட்டு திம்மப்பாவுடன் தகராறு செய்தார். அதற்கு திம்மப்பா, இங்கு சத்தம் போடவேண்டாம். மறைவாக போய் பேசலாம் என்று கூறி ரேவதியை அங்கிருந்த முட்புதர் அருகே அழைத்துச் சென்றார்.
பின்னர் திடீரென ரேவதி வாயில் துணியை வைத்து அமுக்கி, அவர் அணிந்து இருந்த சுடிதார் துப்பட்டாவால் அவரது கை, கால்களை கட்டினார். பின்னர் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் வழிந்ததால் அவர் மயங்கினார்.
ரேவதி அரை மயக்கத்தில் இருந்தபோதே, அவரை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்துவிட்டு திம்மப்பா அங்கிருந்து தப்பியது தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திம்மப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story