உளுந்தூர்பேட்டை அருகே இருதரப்பினர் மோதல் டிராக்டருக்கு தீ வைப்பு


உளுந்தூர்பேட்டை அருகே  இருதரப்பினர் மோதல் டிராக்டருக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 4:51 PM GMT (Updated: 27 Jun 2021 4:51 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே இருதரப்பினரிடையே நடந்த மோதலில் டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது. வீடுகளும் சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

உளுந்தூர்பேட்டை

பேனர் வைப்பதில் தகராறு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவரின் வீட்டு திருமண விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பேனர் வைப்பதில் அதே பகுதியை சேர்ந்த ஜெய்சன் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அலெக்சாண்டர் தரப்பினரை இரும்பு குழாய் மற்றும் உருட்டு கட்டைகளால் ஜெய்சன் தரப்பினர் தாக்கினர். இதில் பிராங்கிளின், ரிச்சர்ட், ஜான், அந்தோணி ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வீடுகள் சூறை

பின்னர் நேற்று மதியம் அலெக்சாண்டர் தரப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பயங்கர ஆயுதங்களுடன் ஜெய்சன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதனால் ஜெய்சன் வீடு உள்பட 3 வீடுகளை அவர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
பின்னர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஜெய்சனுக்கு சொந்தமான டிராக்டருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் டிராக்டர் எலும்பு கூடுபோல் ஆனது. 

போலீசார் விசாரணை 

இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமொழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு சூறையாடப்பட்ட 3 வீடுகளையும், தீ வைத்து எரிக்கப்பட்ட டிராக்டரையும் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இரு தரப்பினரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story