கரூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
கரூர் மாவட்ட பள்ளிகளில் நேற்று மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
கரூர்
மாணவர் சேர்க்கை
கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பணி நேற்று நடைபெற்றது. இதையடுத்து பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பணி குறித்தும், போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? என்றும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
கலெக்டர் பேட்டி
பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையினை தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளியணை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பணி தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 666 தொடக்கப்பள்ளிகளும், 183 உயர்நிலைப்பள்ளிகளும், 93 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 1,061 பள்ளிகள் உள்ளன.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதில் அரசுப்பள்ளிகளில் 79 ஆயிரத்து 753 மாணவ, மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15 ஆயிரத்து 901 மாணவ - மாணவிகளும், தனியார் பள்ளிகளில் 73 ஆயிரத்து 793 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 447 மாணவ, -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றார்கள். இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையினை அதிகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பள்ளிகளில் ஏதேனும் அடிப்படை வசதிக்குறைபாடுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்படும். மேலும் பள்ளிகளில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, வெள்ளியணை மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்துச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story