வாடகை வசூலிப்பதில் தற்போதைய நிலை தொடர ஐகோர்ட்டு உத்தரவு


வாடகை வசூலிப்பதில் தற்போதைய  நிலை தொடர ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 July 2021 1:07 AM IST (Updated: 1 July 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பழ மார்க்கெட்டில் வாடகை வசூலிப்பதில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,ஜூலை
மதுரை பழ மார்க்கெட்டில் வாடகை வசூலிப்பதில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாட்டுத்தாவணிக்கு மாற்றம்
மதுரையை சேர்ந்த கந்தையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை பழ கமிஷன் வணிகர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ளேன். மதுரை சிம்மக்கல், யானைக்கல் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, மொத்த, சில்லறை விற்பனை பழக்கடைகளை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றுவது என மதுரை மாநகராட்சி தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாட்டுத்தாவணி பகுதியில் 240 கடைகள் கட்டப்பட்டன.
முடிவு
இதில் எங்கள் சங்கத்தினருக்கு 147 கடைகளும், மற்றொரு சங்கத்தினருக்கு 93 கடைகளும் ஒதுக்கப்பட்டன. ஒரு சதுர அடிக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு கடைக்காரர்களின் பங்களிப்புத்தொகையாக செலுத்தப்பட்டது. பின்னர் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கடை வாடகை தொகையில் 25 சதவீதத்தை ஏற்கனவே தாங்கள் செலுத்திய பங்களிப்புத்தொகையில் பிடித்தம் செய்து கொண்டு, 75 சதவீத தொகையை மட்டும் வாடகையாக செலுத்துவது என்று முடிவு செய்தனர். ஆனால் இதுதொடர்பான உத்தரவை 4 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்தனர். தற்போது கடந்த மார்ச் மாதம் எந்த ஒரு முறையான அறிவிப்பும் இன்றி வாடகை தொடர்பான உத்தரவை செயல்படுத்துவதாக மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தடை விதிக்க வேண்டும்
இது ஏற்புடையதல்ல. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊரடங்கின் காரணமாக எங்கள் தொழிலில் ஏராளமான நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். எனவே மாத வாடகை செலுத்துவது தொடர்பான மாநகராட்சி கமிஷனர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், மாட்டுத்தாவணி பழக்கடைகளில் வாடகை வசூலிப்பது தொடர்பான உத்தரவை செயல்படுத்துவதில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story