சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்


சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 2 July 2021 2:55 PM GMT (Updated: 2 July 2021 2:56 PM GMT)

ஊட்டி-கூடலூர் இடையே சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஊட்டி,

ஊட்டி-கூடலூர் இடையே சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையானது, முக்கிய சாலையாக உள்ளது. அதாவது ஊட்டியில் இருந்து கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும், அங்கிருந்து ஊட்டிக்கும் சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

இது தவிர சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அந்த சாலையில் குறுகிய வளைவுகள் இருப்பதால், எதிரே வரும் வாகனங்களை டிரைவர்கள் கவனிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா தலங்கள் அருகில் உள்ள சாலையோரங்களில் சிலர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

விரிவாக்க பணிகள்

இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிங்கர்போஸ்ட் முதல் எச்.பி.எப்., தலைகுந்தா வழியாக பைன்பாரஸ்ட் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் மண் திட்டுகள் அகற்றி தோண்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டு வருகிறது.

விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்க பணிக்காக தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த வீடுகளின் ஒரு பகுதிகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன. மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளுக்காக லாரிகள் சென்று வருவதால் சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. அதனை சீரமைக்கும் வகையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

30 அடியாக...

மேலும் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், எளிதில் வழிந்தோடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சாலையின் அடியில் அமைக்கப்பட்ட மழைநீர் குழாய்கள் அகற்றப்பட்டு, மண் படிந்து ஏற்பட்ட அடைப்புகள் சரி செய்யப்படுகிறது. மீண்டும் புதிய குழாய்கள் பொருத்தப்படுகின்றன.

முதலில் சாலையின் அகலம் 18 அடியாக இருந்தது. தற்போது இருபுறமும் அகலபடுத்தப்படும் பகுதிகள் சேர்த்து மொத்தம் 30 அடியாக சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.


Next Story