துண்டு பிரசுரம் ஒட்டி வனத்துறையினர் விழிப்புணர்வு


துண்டு பிரசுரம் ஒட்டி வனத்துறையினர் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 2 July 2021 2:56 PM GMT (Updated: 2 July 2021 2:57 PM GMT)

வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வீதிகளில் துண்டு பிரசுரம் ஒட்டி பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கூடலூர்,

வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வீதிகளில் துண்டு பிரசுரம் ஒட்டி பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வனவிலங்குகளுக்கு உணவு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, வாழைத்தோட்டம், மாவனல்லா, சிறியூர், மாயார், பொக்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. 

இங்கு சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகளை கண்டு ரசிக்கின்றனர்.

 இதற்கிடையில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் தங்கள் பகுதிக்கு வனவிலங்குகளை வர வைக்க உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது நாளடைவில் பழக்கமாகி வனவிலங்குகள் ஊருக்குள் வந்து முகாமிடுகின்றன.

விழிப்புணர்வு

இந்த நிலையில் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மசினகுடி, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, பொக்காபுரம், மாவனல்லா, மாயார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுவர்களில் வனத்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அதில், வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உணர வேண்டும்

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதை தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

அவர்கள் வழங்கும் உணவுகளை தின்று பழகியதால்தான் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும் என்றனர்.


Next Story