கொரோனா தொற்றால் இறந்த ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு மானிய கடன்


கொரோனா தொற்றால் இறந்த  ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு மானிய கடன்
x
தினத்தந்தி 2 July 2021 4:34 PM GMT (Updated: 2 July 2021 4:34 PM GMT)

கொரோனா தொற்றால் இறந்த ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு 20 சதவீத மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாட்கோ கடன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய குடும்பத்தில் வருமானம் ஈட்டிய ஆதிதிராவிட நபர் இறந்திருந்தால் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அவரது குடும்பத்தை சார்ந்த நபர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்காக என்.எஸ்.எப்.டி.சி. நிறுவனத்தில் ஆஷா திட்டத்தின் மூலம் 20 சதவீதம் மானியத்துடன் 80 சதவீதம் திரும்ப செலுத்தும் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆண்டு வருமானம்

மேலும் இத்திட்டத்தில் பயனாளிகள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கொரோனா தொற்றால் இறந்தவர் வருமானம் ஈட்டியவராக இருந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.  சாதிச்சான்றிதழ், இறப்பு சான்று, வருமானச் சான்று, வாரிசு சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, கொரோனா தொற்றால் இறந்தவர் வருமானம் ஈட்டியவர் என்பதற்கான சான்றிதழ் தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும்.

ரூ.5 லட்சம் வரை

இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. மேலும் 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தலாம். இதில் பயனடைய விரும்புவோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story