தென்பெண்ணையாற்றில் புதிய அணை கட்டிய கர்நாடகா-தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம்


தென்பெண்ணையாற்றில் புதிய அணை கட்டிய கர்நாடகா-தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 2 July 2021 10:52 PM IST (Updated: 2 July 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசு புதிய அணை கட்டியதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படும் இந்த ஆற்றை நம்பி 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த தென்பெண்ணையாற்றின் நீரை கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக தென்பெண்ணையாற்றின் துணை ஆறாக உள்ள மார்கண்டேய நதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு 2018-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

தமிழகம் எதிர்ப்பு 

இந்தநிலையில் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஏற்பாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். 
அப்போது கர்நாடக அரசு அதிகாரிகள் கர்நாடகா மாநிலம் கோலார், பங்காருபேட்டை, மாலூர் உள்பட 45-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு குடிநீர் வினியோகிக்க இந்த அணை கட்டுவதாக தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் கட்டியது

இதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு, தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக இந்த விவகாரம் பற்றி பேசப்படவில்லை. 
இந்த நேரத்தில் சத்தமின்றி தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டி முடித்து விட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 

தமிழக விவசாயிகள் அதிர்ச்சி 

கடந்த ஒரு ஆண்டில் இந்த அணை விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுமான பணிகள் முடிந்து மதகுகள் மட்டும் இன்னும் அமைக்கப்படாத நிலையில் உள்ளது. மேலும் இந்த அணையில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
430 மீட்டர் நீளத்திலும், 50 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த யார்கோள் அணையில் 165 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீர்வுகாண வேண்டும்

இது குறித்து தமிழக விவசாயிகள் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக தற்போது யார்கோள் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி உள்ளது. ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் நீரை தேக்கும் கட்டமைப்புகளை மேற்கொள்ள கூடாது என்ற ஒப்பந்தம் உள்ளது.
இந்த நிலையில் எப்படி கர்நாடக மாநிலத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது? இதற்கான உரிய ஆவணங்களை கர்நாடக அரசு மத்திய அரசிடம் கொடுத்துள்ளதா?. தமிழக அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தை உடனடியாக அணுகி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story