கடம்பத்தூரில் பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு


கடம்பத்தூரில் பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2021 9:53 AM IST (Updated: 3 July 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூரில் பழங்குடி இன மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயர்புரம் பகுதியில் பழங்குடிகளான இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நேற்று மாலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் இருளர் இன மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? என விவரங்களைக் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் இருளர் இன மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சியில் இருளர் இன குடும்பத்தினருக்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர்கள் வாயிலாக அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படச் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆய்வின்போது திருவள்ளுர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரவணன், கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், தி.மு.க.வின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருவள்ளூர் மாவட்ட இளைஞர் முன்னேற்ற சங்க நிறுவனர் இரா.பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story