மேட்டுப்பாளையம் அருகே வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மேட்டுப்பாளையம் அருகே வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 July 2021 5:50 PM GMT (Updated: 3 July 2021 5:50 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு ரூ.6½ லட்சம் செலவில் வடிகால் அமைக்கும் பணி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையில் இருந்த மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

மேலும் வடிகால் அமைக்க குழிகளும் தோண்டப்பட்டன. இந்த நிலையில் வடிகால் அமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. வீடுகளின் முன்பு குழி தோண்டப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சைலஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, வடிகால் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் 1½  மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story