மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவில் குளறுபடி + "||" + Mess with online booking

தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவில் குளறுபடி

தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவில் குளறுபடி
குமரியில் தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவில் குளறுபடி ஏற்பட்டதால் தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் திடீரனெ முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில், 
குமரியில் தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவில் குளறுபடி ஏற்பட்டதால் தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் திடீரனெ முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி பணி தீவிரம்
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 380 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று முன்தினம் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 14 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வந்தது. இதையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டது. 
சிறப்பு முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 
ஆன்லைனில் குளறுபடி
அதன்படி ஆன்லைன் டோக்கன் முறையில் நேற்று மொத்தம் 24 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. நேரடி டோக்கன் முறையில் 21 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் நகர்நல மையம் மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. நாகர்கோவில் நகரில் மட்டும் வெட்டூர்ணிமடம் அலோசியஸ் பள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி, கோட்டார் கவிமணி பள்ளி, கோணம் கேந்திர வித்யாலயா பள்ளி ஆகியவற்றில் ஆன்லைன் டோக்கன் முறையிலும், இந்துக்கல்லூரி, டதி பள்ளி, குருசடி புனித அந்தோணி பள்ளி ஆகியவற்றில் நேரடி டோக்கன் முறையிலும் என 7 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
டோக்கன் பெற அறிவிக்கப்பட்டிருந்த இணையதளத்தில் அதிகாலை 4 மணிக்கே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 5 மணிக்குத்தான் பலருக்கு இணையதளத்தில் உள்நுழைய முடிந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்யத் தொடங்கினர். அதில் சில நூறு பேருக்கு மட்டுமே ஆன்லைன் டோக்கன் கிடைத்தது. ஏராளமானோருக்கு இணையதளத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஓ.டி.பி. கொடுத்தபிறகு டோக்கன் பதிவிறக்கம் ஆகாமல் போய்விட்டது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.
நேரடியாக டோக்கன் வழங்கினர்
எனவே நேற்று நாகர்கோவிலில் ஆன்லைன் டோக்கன் முறையில் நடந்த சிறப்பு முகாம்களுக்கு குறைவான அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். ஒவ்வொரு மையத்திலும் தலா 300 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்திருந்த போதிலும் சிறப்பு முகாம்களுக்கு 100-க்கும் குறைவான அளவிலேயே தடுப்பூசி செலுத்த மக்கள் வந்திருந்தனர். இதனால் அந்த மையங்களில் கூட்டம் மிக, மிக குறைவாக இருந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளால் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மையங்களில் நேரடியாக மக்களுக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஆன்லைனில் பதிவு செய்யாமல் வெளியில் காத்திருந்தவர்களுக்கும், ஆன்லைனில் பதிவு செய்து டோக்கன் பதிவிறக்கம் ஆகாமல் இருந்தவர்களுக்கும் மீதமிருந்த டோஸ் மருந்துக்கு தகுந்தவாறு டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது. இதேபோன்ற நிலைதான் மாவட்டம் முழுக்க காணப்பட்டது.
14,610 பேர் பயன்
நேரடியாக டோக்கன் பெற்று தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருந்த மையத்தின் முன்பும் நேற்று அதிகாலையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் தலா 300 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து பள்ளி, கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் 45 முகாம்களிலும் மொத்தம் 14 ஆயிரத்து 610 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முற்றுகை போராட்டம்
ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆன்லைன் டோக்கன் மூலம் 320 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான டோக்கன்களை ஆன்லைன் மூலம் அதிகாலையில் இருந்தே பெற முடியவில்லை.
இந்த நிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் குவிந்து தங்களுக்கு நேரடி டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக்கூறி திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பின்பு பொதுமக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.