கொரோனாவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பேட்டி


கொரோனாவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
x
தினத்தந்தி 4 July 2021 4:55 PM GMT (Updated: 4 July 2021 4:55 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் கொரோனாவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் தொற்று அதிகம் உள்ள தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

அதன்படி தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், தொற்று அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி, பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் தெரு, பிலோமினா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று காரணமாக தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டதை கலெக்டர் ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டாட்சியர் வேலுமணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்(பொறுப்பு) டாக்டர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறையவில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இயலாது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டு வாயிலை அடைத்து தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் துண்டறிக்கையில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அலுவலர்களின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 150 வீட்டு வாசல்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் மூன்று வீடுகள் அல்லது மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெரு முழுமையாக அடைக்கப்படும். இது போன்ற நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story