மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு


மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 5 July 2021 2:52 AM GMT (Updated: 5 July 2021 2:52 AM GMT)

மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு.

சென்னை,

சென்னை மாநகர போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திங்கள் (இன்று) முதல் அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது, கொரோனா பரவலை தடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் மாவட்ட கலெக்டர் விஜயராணி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, நொச்சிக்குப்பம், வானகரம் ஆகிய இடங்களில் செயல்படும் மீன் மார்க்கெட்டுகள், கோயம்பேடு, கொத்தவால்சாவடி, ஜாம்பஜார், தியாகராயநகர் போன்ற பகுதிகளிலும், வணிக வளாகங்களிலும், மெரினா, எலியட்ஸ் கடற்கரை போன்ற பகுதிகளிலும், பூங்காக்களிலும் கண்காணிப்பு சோதனை மையங்கள் அமைக்கப்படும்.

அவற்றில் வெப்ப பரிசோதனை பொதுமக்களுக்கு செய்யப்படும். கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யப்படும். சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட 40 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படும். 40 இடங்களிலும் சுழற்சி முறையில் போலீசார், மாநகராட்சி, வருவாய்துறை ஊழியர்கள் பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story