தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற விவசாயி


தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 11 July 2021 8:05 PM GMT (Updated: 11 July 2021 8:05 PM GMT)

செந்துறை அருகே தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை:

தகராறு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன்(வயது 55), கலையரசன். இவர்கள் அருகருகே குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே பாதை சம்பந்தமான முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர்.
இந்த நிலையில் கலையரசனின் தம்பி சிலம்பரசன், முருகேசனின் மகன் அருள்குமாரிடம்(27) ‘ஏன் தேவையில்லாமல் எனது அண்ணன், அண்ணியை தாக்கிவிட்டு, ஊரிலே இல்லாத என் மீதும் பொய் புகார் கொடுத்துள்ளீர்கள்’ என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அருள்குமார், சிலம்பரசனை தாக்கியுள்ளார்.
அடித்துக்கொலை
அப்போது அந்த வழியாக வந்த விவசாயியான பிச்சைப்பிள்ளை(47), ‘ஏன் உறவினர்கள் இடையே தகராறு செய்து கொள்கிறீர்கள், போலீசில் பேசிக் கொள்ளலாமே’ என்று சமரசம் செய்ய முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருள்குமார் உருட்டுக்கட்டையை எடுத்து வந்து பிச்சைப்பிள்ளையின் பின்மண்டையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பிச்சைப்பிள்ளை ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதன் பின்னரும், அருள்குமாரின் தந்தை முருகேசன், தாய் சிவமணி உள்ளிட்ட உறவினர்கள் பிச்சை பிள்ளையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
4 பேர் கைது
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார், பிச்சைப்பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அருள்குமார், முருகேசன், அருள்குமாரின் சித்தப்பா ராமலிங்கம்(46), ராமலிங்கத்தின் மகன் ஆகாஷ்(20) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற விவசாயி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story