பருவமழையை எதிர்கொள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கடலூர் துறைமுகம்-முடசல் ஓடை வரை படகில் சென்று கலெக்டர் ஆய்வு


பருவமழையை எதிர்கொள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கடலூர் துறைமுகம்-முடசல் ஓடை வரை படகில் சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2021 4:44 PM GMT (Updated: 21 July 2021 4:44 PM GMT)

வடகிழக்கு பருவமழையையொட்டி கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் துறைமுகம்- முடசல் ஓடை கடல் பகுதி வரை படகில் சென்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

கடலூர், 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு உப கரணங்கள், முன்களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் பருவமழை காலத்தில் கடலோர பகுதிகளில் மிக தாழ்வான பகுதிகள், தாழ்வான பகுதிகள், மழைநீர் வடியும் முகத்துவார பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கடலோர பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படகு மூலம் சென்று ஆய்வு

அவர் கடலூர் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் முடசல் ஓடை வரை சென்று ஆய்வு செய்தார். அப்போது மிக தாழ்வான, தாழ்வான பகுதிகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக கடலூர் துறைமுகத்தில் பருவமழையை முன்னிட்டு மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப் பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கிருந்த மீனவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.


அப்போது மீனவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய மீன்பிடி வலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீன்துறை அலுவலர்கள் மற்றும் மீனவர்களிடம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்சித்சிங், கூடுதல் கலெக்டரும், மாவட்ட திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

உயிரியல் உயர் ஆய்வு மையம்

இதேபோல்  கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன வாய்க்கால் முகத்துவாரம் அடைபட்ட பகுதிகளையும் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். 

 பின்னர்,  அண்ணாமலை பல்கலைக்கழக உயிரியல் உயர் ஆய்வு மையத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீன்வளத்துறை இயக்குனர் காத்தவராயன், தாசில்தார் அன்பழகன்,  பேரூராட்சி செயல் அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல். மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் நீதிமணி, கிள்ளை கிராம தலைவர் தேவநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story