கடல் போல் காட்சி அளிக்கும் வடுவூர் ஏரி
வடுவூர் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடுவூர்:
வடுவூர் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடுவூர் ஏரி
திருவாரூர்- தஞ்சை மாவட்ட எல்லையில் வடுவூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பறவைகள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகிறது. 320 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரிக்கு காவிரி தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு கல்லணை வழியாக வடுவூர் வடவாற்றில் சென்ற தண்ணீர் மூலம் வடுவூர் ஏரி நிரம்பியது.
கண்ணன் ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்தால் வடுவூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இந்த ஆற்றில் விடப்படும். தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால் வடுவூர் ஏரியில் நிரம்பிய தண்ணீர் அப்படியே திறக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது. இதனால் ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கொரோனா ஊரடங்குக்கு பிறகு இன்னும் ஏரியின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுலா மையத்திற்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த ஏரி மாநில நெடுஞ்சாலையில் ஓரத்திலேயே அமைந்திருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தெற்கு கரையில் நின்று ஏரியின் அழகை ரசித்து செல்கின்றனர். குறுவை சாகுபடிக்கு வடுவூர் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் வடுவூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story