கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்


கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 21 July 2021 5:27 PM GMT (Updated: 2021-07-21T22:57:04+05:30)

கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்கள்ளக்குறிச்சி

மருந்து கடை ஊழியர்

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சீதாபதி(வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சீதாபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். 

மர்ம நபர்

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சீதாபதி தன்னை இங்கு அனுப்பி வைத்ததாகவும் வீட்டில் பூஜை செய்து தோஷம் கழிக்க வேண்டும் என கூறினார். இதை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி அந்த மர்ம நபரை வீட்டின் உள்ளே அழைத்தார். 
பின்னர் அந்த மர்ம நபர் கேட்டுக்கொண்டதன் பேரில் தோஷம் கழிக்க ராஜலட்சுமி பூஜையில் அமர்ந்தார். அப்போது ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி  ஒரு பாத்திரத்தில் போடும்படி மர்ம நபர் கூறினார். உடனே அவரும் தனது கழுத்தில் கிடந்த 11 பவுன் சங்கிலியை கழற்றி பாத்திரத்தில் போட்டார்.

குளியல் அறைக்கு

சில நிமிடங்களுக்கு பின்னர் மர்ம நபர் ராஜலட்சுமியை பூஜையிருந்து எழுந்து கை, கால், முகத்தை கழுவி கொண்டு வருமாறு கூறினார். உடனே அவரும் குளியல் அறைக்கு சென்று கை, கால், முகத்தை கழுவிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபரையும், பூஜையில் பாத்திரத்தில்போட்ட 11 பவுன் சங்கிலியையும் காணாமல் ராஜலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னரே தோஷம் கழிப்பதாக கூறி மர்ம நபர் 11 பவுன் சங்கிலியை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. பறிபோன போன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலைவீச்சு

இது குறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
பட்டப்பகலில் மூதாட்டியிடம் தோஷம் கழிப்பதாக கூறி 11 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் அபேஸ் செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story