திருச்சி பொன்மலையில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது; உடந்தையாக இருந்த போலி சாமியார், வக்கீல் சிக்கினர்


திருச்சி பொன்மலையில்  டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது; உடந்தையாக இருந்த போலி சாமியார், வக்கீல் சிக்கினர்
x
தினத்தந்தி 21 July 2021 7:52 PM GMT (Updated: 2021-07-22T01:22:22+05:30)

திருச்சி பொன்மலையில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியும், அதற்கு உடந்தையாக இருந்த போலி சாமியார், வக்கீலும் கைது செய்யப்பட்டனர்.

பொன்மலைப்பட்டி, 
திருச்சி பொன்மலையில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியும், அதற்கு உடந்தையாக இருந்த போலி சாமியார், வக்கீலும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து மது பாட்டில்களை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில்  கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெய் (வயது 40) மற்றும் அவரது அண்ணன் ராஜ்குமார் ஆகியோர் மீது பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த வழக்கில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி ஜெய் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். 

கொலை மிரட்டல்

இந்நிலையில் புகார் கொடுத்த சுந்தர்ராஜனை, ரவுடி ஜெய் வழிமறித்து ‘நீ கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொன்னால், உன்னை கொன்று விடுவேன். காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ள அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் (31) மற்றும் வக்கீல் கார்த்திக் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும், சாமியார் பாலசுப்பிரமணியமுக்கு எல்லா இடத்திலும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், தன்னை என்கவுன்ட்டர் லிஸ்டில் இருந்து பெயரை நீக்குவதாகவும், வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், தன்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும் பட்சத்தில், அவர்களை கொலை செய்து விடுங்கள் என்று அல்லித்துறை சாமியார் கூறியதாகவும் ஜெய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வைரல் ஆன ஆடியோ

இதற்கிடையே ரவுடி கொட்டப்பட்டு ஜெய், அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வக்கீல் கார்த்திக் ஆகியோருடன் தொடர்பினை வைத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினரிடம் செல்வாக்கு உள்ளது போல் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுமக்களின் ஒரு பிரிவினர் இடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரின் பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெய் மீது பொன்மலை போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 
போலி சாமியார்

விசாரணையில் தேஜஸ் என்ற பாலசுப்பிரமணியம் தன்னை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்பட்ட நபர் போலி சாமியார் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுமார் 30 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி ஜெய், அவருக்குத் துணையாக செயல்பட்ட வக்கீல் கார்த்திக், போலி சாமியார் பாலசுப்பிரமணியம் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி சாமியார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் போலி சாமியார்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற போலி சாமியார்களால் யாரும் ஏமாற்ற பட்டிருந்தால் காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம். இதுபோன்ற போலி சாமியார்களிடம் சென்று யாரும் ஏமாற வேண்டாம் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

Next Story