கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட பெட்டகத்தில் காலாவதியான பொருட்களா?


கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட பெட்டகத்தில் காலாவதியான பொருட்களா?
x
தினத்தந்தி 21 July 2021 7:53 PM GMT (Updated: 21 July 2021 7:53 PM GMT)

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட பெட்டகத்தில் காலாவதியான பொருட்களா இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை

கோவை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கென்னடி வீதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் அக்கா கர்ப்பம் அடைந்தார். 

இதையடுத்து அவர் சிங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்தார். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு பிக்மி எண் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும்  ஊட்டச்சத்து மருந்து பெட்டகத்தை வழங்கினர். 

தொடர்ந்து அந்த பெண் பெட்டகத்தை வாங்கிசென்று வீட்டில் வைத்து அதில் இருந்த பொருட்களை பார்த்தார். அப்போது அதில் இருந்த நெய், பேரிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்கள் காலாவதி ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஊட்டச்சத்து பெட்டகத்தை அந்த பயனாளி முன்கூட்டியே ஒரு வேலை வாங்கியிருக்கலாம். எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக வேறு யாரேனும் கர்ப்பிணிகளுக்கு அந்த பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றார்.

Next Story