கர்நாடக முதல்-மந்திரியை மாற்றும் விவகாரம்; பா.ஜனதா மேலிடத்திற்கு நெருக்கடி - எடியூரப்பாவுக்கு மேலும் 50 மடாதிபதிகள் ஆதரவு


முதல்-மந்திரி எடியூரப்பா.
x
முதல்-மந்திரி எடியூரப்பா.
தினத்தந்தி 22 July 2021 2:33 AM IST (Updated: 22 July 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பாவை 2-வது நாளாக 50-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் பா.ஜனதா மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: முதல்-மந்திரி எடியூரப்பாவை 2-வது நாளாக 50-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் பா.ஜனதா மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

எடியூரப்பா பதவி விலக உத்தரவு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு 2023-ம் ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மேலும் எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவருக்கு பதிலாக மாற்று தலைவரை தேர்வு செய்ய பா.ஜனதா கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் எடியூரப்பா கடந்த 16-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, 75 வயது தாண்டிவிட்டதால், நீங்கள் பதவி விலக வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு மேலிட தலைவர்கள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

26-ந்தேதி ராஜினாமா?

ஆனால் இந்த தகவலை எடியூரப்பா உடனே மறுத்தார். வருகிற 26-ந் தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாக வெளியான ஆடியோ உரையாடல் பதிவில், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக இடம் பெற்று இருந்தது. இதன் மூலம் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்கு எடியூரப்பாவின் ஆதரவு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மடாதிபதிகள் சந்திப்பு

இந்த நிலையில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேற்று முன்தினம் எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன் பிறகு பேட்டி அளித்த அவர்கள், எக்காரணம் கொண்டும் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்றும், மீதமுள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பாவை பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர்.

இந்த நிலையில் 2-வது நாளாக துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் காவி உடையில் வந்து எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது முதல்-மந்திரிக்கு அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு மடாதிபதி சித்தலிங்க சுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரியை மாற்றுவது...

“முதல்-மந்திரி எடியூரப்பாவை நாங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. கட்சி மேலிடம் தனக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வேன் என்றும், கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும் 75 வயது தாண்டிய பிறகும் எனக்கு பா.ஜனதா மேலிடம் பதவி வழங்கியது என்றும் சொன்னார்.

கொரோனா பரவல் நீடித்து வரும் இந்த நெருக்கடியான தருணத்தில் முதல்-மந்திரியை மாற்றுவது என்பது சரியான நடவடிக்கை அல்ல. மீதமுள்ள 2 ஆண்டுகளும் அவர் பதவியில் நீடிக்க பா.ஜனதா மேலிடம் அனுமதிக்க வேண்டும். எடியூரப்பா நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நேரத்தில் அவரை மாற்றினால், சவால்களை சரியான முறையில் எதிர்கொள்வது கடினமானதாகிவிடும்.

பா.ஜனதா மேலிடத்திற்கு நெருக்கடி

இதை பா.ஜனதா மேலிடம் புரிந்துகொள்ள வேண்டும். மடாதிபதிகளாகிய எங்களுக்கு எந்த ஆசைகளும் இல்லை. நல்ல பணிகளை ஆற்றி வரும் எடியூரப்பா பதவியில் நீடிக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.”
இவ்வாறு சித்தலிங்க சுவாமி கூறினார்.

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு லிங்காயத் சமூகம் மட்டுமின்றி பிற சமூகங்களின் மடாதிபதிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது பா.ஜனதா மேலிடத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே எடியூரப்பாவை மாற்றும் முடிவு திரும்ப பெறப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுவது சந்தேகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்ப்பு அணி

அதற்கு பதிலாக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து நிகழ்ச்சி மட்டும் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு தகவலும் கசிந்துள்ளது. அது, முதல்-மந்திரியாக தேர்வு செய்ய தான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும், முதல்-மந்திரி பதவி விலக அந்த கூட்டத்தை நடத்த தேவை இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் எடியூரப்பா பதவி விலகுவது உறுதி என அவரது எதிர்ப்பு அணியினர் சொல்கிறார்கள்.

எடியூரப்பாவை நீக்க திணறும் பா.ஜனதா மேலிடம்

எடியூரப்பா மாற்றப்பட்டால், அவருக்கு இணையான மக்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு பெரிய தலைவர் கர்நாடக பா.ஜனதாவில் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அது பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், அதனால் அடுத்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா வீரசைவ-லிங்காயத் சமூக மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். 

அதனால் எடியூரப்பாவை நீக்கும் விஷயத்தில் பா.ஜனதா மேலிடம் உறுதியான முடிவு எடுக்காமல் திணறுகிறது. ஏனென்றால் கர்நாடகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வீரசைவ-லிங்காயத் சமூகத்தினர், பா.ஜனதா வாக்கு வங்கியாக உள்ளனர். அதே சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை நீக்கினால் அது அந்த மக்களின் கோபத்திற்கு பா.ஜனதா ஆளாக நேரிடும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அதனால் தான் பா.ஜனதா அதீத பலம் வாய்ந்ததாக இருந்தாலும், எடியூரப்பா விஷயத்தில் ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

எடியூரப்பாவுடன் மந்திரிகள் சந்திப்பு

முதல்-மந்திரி எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கக் கூடாது என வலியுறுத்தி, அவரை மடாதிபதிகள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார் ஆகியோர் எடியூரப்பாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். எடியூரப்பா மாற்றப்பட்டால் அவரை நம்பி வந்த தங்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று அவா்கள் அஞ்சுகிறார்கள். இதுகுறித்து எடியூரப்பாவிடம் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. திடீர் டெல்லி பயணம்

எடியூரப்பாவின் தீவிர ஆதவாளர்களில் ஒருவரும், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நேற்று திடீரென டெல்லி சென்றார். அவர் மேலிட தலைவர்களை சந்தித்து எடியூரப்பாவை பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக டெல்லி வந்துள்ளதாக கூறினார்.

 அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் செல்வதாக இருந்தது. எடியூரப்பா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் டெல்லி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story