தாம்பத்யத்திற்கு மறுத்ததால் கூலிப்படையை ஏவி பெண் கொலை; கணவர் பரபரப்பு வாக்குமூலம்


தாம்பத்யத்திற்கு மறுத்ததால் கூலிப்படையை ஏவி பெண் கொலை; கணவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 July 2021 2:33 AM IST (Updated: 22 July 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி பெண் கொலையில் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதாவது தாம்பத்யத்திற்கு மறுத்ததால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியதாக கூறியுள்ளார்.

மங்களூரு: உடுப்பி பெண் கொலையில் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதாவது தாம்பத்யத்திற்கு மறுத்ததால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியதாக கூறியுள்ளார். 

விசாலா கொலை

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பினகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவரது மனைவி விசாலா(வயது 36). இவர்கள் 2 பேரும் துபாயில் வசித்து வந்தனர். 
இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும், அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்து உள்ளது. அந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10-ந் தேதி விசாலா துபாயில் இருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் விசாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

4 தனிப்படைகள் அமைப்பு 

இதுகுறித்து அறிந்த பிரம்மாவர் போலீசார் அங்கு சென்று விசாலாவை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விசாலாவை செல்போன், மடிக்கணினி வயர்களால் யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் உத்தரவிட்டு இருந்தார். 

இதற்கிடையே விசாலா கொலையான தகவல் அறிந்ததும் ராமகிருஷ்ணாவும் துபாயில் இருந்து பிரம்மாவருக்கு வந்து இருந்தார். சொத்து பிரச்சினையில் விசாலா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

காவலில் எடுத்து விசாரணை 

இந்த நிலையில் ராமகிருஷ்ணாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். மேலும் விசாலா கொலை தொடர்பாக ராமகிருஷ்ணாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது ராமகிருஷ்ணா தான் கூலிப்படை ஏவி விசாலாவை கொன்றது தெரிந்தது. இதனால் அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து இருந்தனர். 
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது விசாலாவை கொலை செய்தது குறித்து ராமகிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தாம்பத்யத்திற்கு மறுப்பு

துபாயில் வசித்து வந்த ராமகிருஷ்ணா-விசாலா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணா, விசாலாவை அடிக்கடி தாம்பத்யத்திற்கு அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு விசாலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் வெறுப்பு அடைந்த ராமகிருஷ்ணா, விசாலாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடுப்பிக்கு வந்த ராமகிருஷ்ணா தனது மனைவியை கொலை செய்வது பற்றி நண்பர்கள் சிலருடன் பேசியுள்ளார். பின்னர் உத்தர பிரதேசத்தில் வசித்து வரும் கூலிப்படையை சேர்ந்த சமிநிஷார்த் மற்றும் அவரது நண்பரிடம் விசாலாவை கொலை செய்ய ராமகிருஷ்ணா ரூ.2 லட்சம் கொடுத்து உள்ளார். மேலும் உடுப்பியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைவியின் விவரங்கள் பற்றியும் கூறியுள்ளார். 

கூலிப்படையை சேர்ந்தவர் கைது 

இந்த நிலையில் சொத்து பிரச்சினையை சரிசெய்ய துபாயில் இருந்து உடுப்பிக்கு விசாலாவை அனுப்பி வைத்த ராமகிருஷ்ணா, விசாலா உடுப்பிக்கு வந்து உள்ளது பற்றி கூலிப்படையை சேர்ந்தவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த கூலிப்படையை சேர்ந்த 2 பேரும் விசாலாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். 

ராமகிருஷ்ணா கொடுத்த தகவலின்பேரில் கூலிப்படையை சேர்ந்த சமிநிஷார்த்தையும் பிரம்மாவர் போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று கொலை நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story