போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2021 2:59 PM GMT (Updated: 22 July 2021 2:59 PM GMT)

இன்ஸ்பெக்டர் தாக்கியதால் தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்டித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் (வயது 19). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தேவதானப்பட்டியில் தனது வீட்டுக்கு தேவையான பலசரக்கு பொருட்களை வாங்கி கொண்டு வைகை அணை பிரிவில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

 அப்போது, அந்த வழியாக தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்கு நின்று கொண்டிருந்த ரமேஷ் கண்ணனிடம், முத்துமணி விசாரணை நடத்தினார். 

அப்போது ரமேஷ்கண்ணனை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதனையடுத்து வீட்டுக்கு வந்த ரமேஷ் கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக்கண்ட அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, தன்னை இன்ஸ்பெக்டர் தாக்கியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ரமேஷ்கண்ணன் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள், தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்தார். பின்னர் அவர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, விசாரணை நடத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் முற்றுகையை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே ரமேஷ் கண்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
---------

Next Story