எருமைக்கடா மைதானத்தில் கடைகள் அமைக்க கூடாது; கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு


எருமைக்கடா மைதானத்தில் கடைகள் அமைக்க கூடாது; கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு
x
தினத்தந்தி 22 July 2021 8:07 PM GMT (Updated: 22 July 2021 8:07 PM GMT)

பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானத்தில் கடைகள் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.

நெல்லை:
இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் ராம செல்வராஜ் தலைமையில் தசரா விழா கூட்டமைப்பு தலைவர் கனகசுப்பிரமணியன், ஆதிமூலம், மகேஷ், சங்கர், சோமசுந்தரம், கணேசன், வேல்மணி, பிரம்மநாயகம் உள்ளிட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் மேம்படுத்தப்படுகிறது. இதையொட்டி அங்குள்ள வியாபாரிகளுக்கு எருமைக்கடா மைதானம் மற்றும் ஜவகர் திடலில் தற்காலிக கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஜவகர் திடலில் தசரா கால கட்டத்தில் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில் சப்பரங்கள் வரிசையாக ஒரே நேரத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக நிறுத்தி வைக்கப்படும். இந்த மைதானமே அதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. அதேபோல் எருமைக்கடா மைதானத்தில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருமை வடிவில் வரும் அசுரனை அம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இந்த 2 மைதானங்களிலும் தற்காலிக கடைகள் அமைத்தால் தசரா திருவிழாவின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படும். எனவே அங்கு தற்காலிக கடைகள் கட்டக்கூடாது. வேறு இடங்களில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதேபோல் ராதாபுரம் தாலுகா பொன்னார்குளம், சங்கனேரி, புத்தேரி, சூட்சிகுளம், கீழ்குளம், மிதியன்குளம், நக்கனேரி பகுதிகளை சேர்ந்த மக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் கல்குவாரிகள் மூலம் நாங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறோம். ஆனால் கல்குவாரிகள் தொடர்பாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

Next Story