ஸ்மார்ட் சிட்டி பணிகளை குறித்த காலத்தில் முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரருக்கு அபராதம்


ஸ்மார்ட் சிட்டி பணிகளை குறித்த காலத்தில் முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 July 2021 8:34 PM GMT (Updated: 2021-07-23T02:04:28+05:30)

தஞ்சையில் ரூ.965 கோடி மதிப்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் ரூ.965 கோடி மதிப்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 விதமான பணிகள் ரூ.965 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சையிலுள்ள அய்யங்குளம் மற்றும் சாமந்தன் குளம் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தஞ்சை பழைய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட உள்ளது.
திருவையாறு பஸ்நிலைய கட்டிட பணிகள் மற்றும் கீழவாசல் மார்க்கெட், அரண்மனை வளாகத்தில் உள்ள காமராஜர் மார்க்கெட் புதிய கட்டிட பணிகள் மற்றும் சிவகங்கை பூங்கா பணிகள் மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆய்வுக் கூட்டம்
தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் சரவண குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் மற்றும் உதவிப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பூங்கா பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு தஞ்சை பழைய பஸ் நிலையம் புதிய கட்டிட பணி திருவையாறு பஸ் நிலைய கட்டிட பணிகள் காமராஜர் மார்க்கெட் கட்டிட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து பணிகளும், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடிக்க மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
அபராதம் விதிக்கப்படும்
மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கவும், அதன்பின்னரும் பணிகள் தாமதம் ஆனால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு மறு டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story