பெண்களை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 8 பேர் கைது


பெண்களை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 8 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 8:39 PM GMT (Updated: 2021-07-23T02:09:45+05:30)

தஞ்சையில் மசாஜ் சென்டர், லாட்ஜ், வாடகை வீட்டில் பெண்களை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். 11 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் மசாஜ் சென்டர், லாட்ஜ், வாடகை வீட்டில் பெண்களை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். 11 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
விபசாரம்
தஞ்சை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர், ஓட்டலுடன் கூடிய விடுதி, வாடகை வீடு ஆகியவற்றில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு புகார்கள் வந்தன. உடனே அவர், விபசார தொழிலை முற்றிலுமாக ஒழிக்கவும், இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீதர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் தஞ்சை மாநகரில் நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மசாஜ் சென்டர்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் நவரசக்கிளி என்ற பெயரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு 5 பெண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மசாஜ் சென்டர் நடத்தி வந்த சென்னையை சேர்ந்த முகமது முஸ்தபா(வயது 40), ஈரோட்டை சேர்ந்த சதீஷ்(30) ஆகிய 2 பேர் சிக்கினார்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை, கோவை, ஈரோடு ஆகிய பகுதியில் இருந்து பெண்களை தஞ்சைக்கு அழைத்து வந்து தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது முஸ்தபா, சதீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வரப்பட்ட 5 பெண்களை மீட்டனர்.
விடுதியில் 4 பெண்கள் மீட்பு
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூன்றாவது கேட் எதிரே ஓட்டலுடன் கூடிய விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், அந்த விடுதியின் உரிமையாளர் தஞ்சை தெற்கு பூக்கொல்லையை சேர்ந்த பிரபு(33), அவரது நண்பர்களான பூக்கொல்லையை சேர்ந்த கார்த்தி(26), பர்மா காலனியை சேர்ந்த ஜெயபால்(25) ஆகியோர் 4 பெண்களை தங்க வைத்து ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, கார்த்தி, ஜெயபால் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கு தங்கி இருந்த 4 பெண்களை மீட்டனர்.
வாடகைக்கு வீடு எடுத்து
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மூலிகை பண்ணை அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் சிலர் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் விரைந்து சென்று வாடகை வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார்(56), அரவது மனைவி ராஜம்(50), திருச்சி பாலக்கரை புதுத்தெருவை சேர்ந்த கணேசன் (58) ஆகியோர், 2 பெண்களை தங்க வைத்து செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில்குமார், ராஜம், கணேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் 2 பெண்களையும் மீட்டனர். 
8 பேர் கைது; 11 பெண்கள் மீட்பு
தஞ்சையில் மொத்தம் 3 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 பெண்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 11 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதான செந்தில்குமார், ராஜம் ஆகிய 2 பேரும் பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்று இன்னும் பல இடங்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.

Next Story