தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
மைசூரு: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல, கர்நாடகம்-தமிழ்நாடு மக்களின் உயிர் நாடியாக திகழும் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக, அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் தலைக்காவிரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன்காரணமாக கடந்த சில தினங்களாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக நேற்று முன்தினம் கபினி அணை நிரம்பியது. கடல் மட்டத்தில் இருந்து 2,280 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,281.33 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,626 கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 4,333 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.
கே.ஆர்.எஸ். அணை
இதேபோல, 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 102.40 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16,214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,357 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாகவும், வெளியேற்றம் 2 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.
வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர்
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 17,357 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6,333 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது இரு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கபிலா ஆறு வழியாகவும், கே.ஆர்.எஸ். அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆறு வழியாகவும் வந்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா பகுதியில் உள்ள திருமாகூடலு பகுதியில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்திற்கு செல்கிறது.
Related Tags :
Next Story