ஐஸ் வியாபாரி வீட்டில் புதையல் இருப்பதாக குழி தோண்டப்பட்டதால் பரபரப்பு


ஐஸ் வியாபாரி வீட்டில் புதையல் இருப்பதாக குழி தோண்டப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 July 2021 3:24 AM IST (Updated: 23 July 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஐஸ் வியாபாரி வீட்டில் புதையல் இருப்பதாக குழி தோண்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்:

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-
ஐஸ் வியாபாரி
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 39). ஐஸ் வியாபாரி. இவருக்கு செல்வி (35) என்ற மனைவியும், பிரபா (15) என்ற மகளும், தேவராஜ் (12) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் பிரபு தனது குடும்ப கஷ்டத்தால் 1½ ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார். மேலும் குடும்பத்தில் தொடர்ந்து கஷ்ட, நஷ்டம் ஏற்பட்டது குறித்து பிரபு, தனது நண்பரான திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூரை சேர்ந்த பிரபாகர்(40) என்பவரிடம் கூறி புலம்பியுள்ளார்.
ரூ.50 ஆயிரத்திற்கு பேரம்
இதையடுத்து பிரபாகர் தனக்கு தெரிந்த மாந்திரீகம் செய்யக்கூடிய பூசாரியான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொளக்காட்டுபுதூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியிடம்(51), பிரபுவை அழைத்துச்சென்று ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது கிருஷ்ணமூர்த்தி, பிரபுவிடம் ‘உன் வீட்டின் பூமிக்கு அடியில் புதையல் இருக்கிறது, புதையலை எடுத்து கொடுத்தால் எனக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும்’ என்று கூறி, பிரபுவிடம் பேரம் பேசியுள்ளார்.
இதனை நம்பிய பிரபுவும், கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.5 ஆயிரம் முன்பணமாக கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, பிரபாகர், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி டீச்சர் காலனியை சேர்ந்த வெள்ளியங்கிரி(36) ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விளாமுத்தூரில் உள்ள பிரபு வீட்டிற்கு வந்து புதையல் இருப்பதாக கூறப்பட்ட இடத்தை பார்த்துவிட்டு சென்றனர்.
குழி தோண்டினர்
பின்னர் அவர்கள் 3 பேரும் மீண்டும் பிரபு வீட்டிற்கு கடந்த 20-ந்தேதி வந்துள்ளனர். அப்போது அவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் யாகம் வளர்த்து, பூஜை செய்து 3 அடி அகலம், 6 அடி நீளத்திற்கு குழி தோண்ட ஆரம்பித்துள்ளனர்.
இரவு நேரத்தில் மட்டும் குழி தோண்டப்பட்டதாலும், குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண் வீட்டின் உள்ளேயே குவித்து வைக்கப்பட்டிருந்ததாலும், இது குறித்து அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரியவில்லை.
3 பேர் கைது
தொடர்ந்து 3-வது நாளாக நேற்று முன்தினம் இரவும் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது 12 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டியும் புதையல் ஏதும் கிடைக்காததால், இனிமேல் குழி தோண்டுவதை நிறுத்துமாறு 3 பேரிடமும், பிரபு கூறியுள்ளார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் கேட்ட ரூ.50 ஆயிரத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் தெய்வக்குற்றம் ஆகிவிடும். நாங்கள் உன் வாயை கட்டி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர்களிடம் பணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறிய பிரபு, இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் நள்ளிரவில் பெரம்பலூர் போலீசார் பிரபுவின் வீட்டிற்கு சென்று மாந்திரீக பூசாரி கிருஷ்ணமூர்த்தி, பிரபாகர், வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.
ஐஸ் வியாபாரி வீட்டில் புதையல் இருப்பதாக கூறி யாகம் நடத்தி பூஜை செய்து குழி தோண்டிய சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story