திருமருகல் அருகே சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அனந்தநல்லூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து மேலத்தெரு வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அப்பகுதி பொதுமக்கள் திட்டச்சேரி பஸ் நிலையம், கடைத்தெரு, மார்க்கெட், வங்கி, போலீஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதே போல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அன்றாடம் சென்று வருகின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது.
இந்த பள்ளங்களில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாக டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story