திருட்டு போன ரூ.5½ லட்சம் செல்போன்கள் மீட்பு
திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.5½ லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஒப்படைத்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.5½ லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஒப்படைத்தார்.
புகார்கள்
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக கடந்த 2020-21-ம் ஆண்டில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்பட போலீஸ் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டன. இதனையெடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்படி செல்போன் திருட்டு குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் திருட்டு போன செல்போன்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
50 செல்போன்கள் மீட்பு
இதில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 50 செல்போன்களை அதன் உரிமையாளர்களை நேரில் அழைத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஒப்படைத்தார்.
மேலும் துரிதமாக விசாரணை நடத்தி செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை அவர் பாராட்டினார். செல்போன்களை பெற்று கொண்ட உரிமையாளர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
மக்களுக்கு சேவைபுரிய 24 மணிநேரமும் தயார்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறியதாவது:-
அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருட்டு, காணாமல் போன செல்போன்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் அவசியம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீடு, தெருக்கள் போன்ற பகுதிகளில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
விபத்து, சமூக விரோத செயல்கள் நடந்தால் உடனே போலீசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றங்களை தடுப்பதில் போலீசாருக்கு தூதுவராக பொதுமக்கள் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை புரிய 24 மணி நேரமும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story