பெண்கள்-குழந்தைகளுக்கு உதவி செய்ய கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை மையம்


பெண்கள்-குழந்தைகளுக்கு உதவி செய்ய கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை மையம்
x

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிர்பயா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி செய்கிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்ய நிர்பயா ஆலாசனை உதவி மையம் ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் இந்த ஆலோசனை மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூகநலத்துறை முதன்மை செயலாளர் ஷம்புகலோலிகர், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை இயக்குனர் ரத்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை மையத்தில் சமூகஆலோசகர், சட்டரீதியிலான ஆலோசகர், குழந்தை மனநல ஆலோசகர், வரவேற்பாளர் என நான்கு பேர்கள் சமூக நலவாரியம் மூலமாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சி முடிந்தவுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்கள் உதவி எண் ‘181’ வாயிலாக புகார் கூறுபவர்கள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் வாயிலாக வருபவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக வருபவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனை இங்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகநலத்துறை முதன்மை செயலாளர் ஷம்புகலோலிகர் கூறும்போது, “இந்த ஆலோசனை மையம் வாயிலாக, வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டஆலோசனை, சட்ட உதவி வழங்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

Next Story