கள்ளத்தொடர்பை கைவிடாததால் தாயும், கணவரும் தீர்த்து கட்டிய கொடூரம்
உத்தமபாளையம் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை கைவிடாததால் தாயும், கணவரும் தீர்த்து கட்டியது அம்பலமானது.
உத்தமபாளையம்:
மயானத்தில் உடல் எரிப்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 29). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார்.
ரஞ்சிதா, கல்யாணகுமாரின் உடன் பிறந்த சகோதரி கவிதாவின் மகள் ஆவார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மயானத்தில் ரஞ்சிதாவின் உடலை எரிப்பதாக, ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.
பெண் மர்மச்சாவு
பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்ததாக கல்யாணகுமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரத்தில் ரஞ்சிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் கருதி விசாரணையை முடுக்கி விட்டனர்.
கழுத்தை நெரித்து கொலை
இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து ரஞ்சிதா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இ்தனையடுத்து கொலையாளிகளை பிடிக்க உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி மேற்பார்வையில், ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரஞ்சிதாவின் கணவர் கல்யாணகுமார் (32), தாயார் கவிதா (45) ஆகியோரை பிடித்து தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து, ரஞ்சிதாவை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
இந்த கொலைக்கு அவர்களது உறவினர் ஆனந்தகுமார் (32) என்பவரும் உடந்தையாக இருந்தார். இதனையடுத்து கல்யாணகுமார், கவிதா, ஆனந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
கொலைக்கான காரணம் குறித்து கைதான கல்யாணகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய சொந்த அக்காள் கவிதாவின் மகள் தான் ரஞ்சிதா. எனக்கும், ரஞ்சிதாவுக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ரஞ்சிதாவுக்கும், ராயப்பன்பட்டி அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த திருமணமான ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை ரஞ்சிதாவை கண்டித்தேன். இருப்பினும், ரஞ்சிதா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
போலீஸ் நிலையத்தில் புகார்
எப்படியாவது ரஞ்சிதா திருந்தி விடுவார் என்று கருதி, அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தேன்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ரஞ்சிதா காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.
போலீசார் விசாரணை நடத்தி, சென்னையில் இருந்து ரஞ்சிதாவை மீட்டு என்னிடத்தில் ஒப்படைத்தனர். இதனால் நான் அவமானம் அடைந்தேன். இதற்கு மேல் ரஞ்சிதாவை உயிரோடு வைக்கக்கூடாது என்று தீர்மானித்து, அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இதுதொடர்பாக என்னுடைய அக்காளும், ரஞ்சிதாவின் தாயுமான கவிதாவிடம் கூறினேன். அவரும் ரஞ்சிதாவை கொலை செய்து விடலாம் என்றார். இதனையடுத்து கவிதா, என்னுடைய வீட்டுக்கு வந்தார். ரஞ்சிதாவும் வீட்டில் இருந்தார்.
துடி, துடித்து சாவு
நாங்கள் திட்டமிட்டப்படி திடீரென நான், ரஞ்சிதாவின் கழுத்தை சேலையால் இறுக்கினேன். அப்போது, அவருடைய கால்களை கவிதா இறுக்கமாக பிடித்து கொண்டார்.
சிறிதுநேரத்தில் ரஞ்சிதா துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை மயானத்தில் எரிக்க முடிவு செய்தோம். இதற்கு என்னுடைய உறவினர் ஆனந்தகுமாரின் உதவியை நாடினோம்.
அவரது ஒத்துழைப்புடன் மயானத்துக்கு ரஞ்சிதாவின் உடலை கொண்டு சென்று எரித்தோம். ஆனால் பாதி உடல் எரிந்த நிலையில் போலீசார் வந்து, ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் ரஞ்சிதாவை கொலை செய்தது அம்பலமானது.
அதன்பிறகு விசாரணை நடத்தி, எங்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு கல்யாணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளத்தொடர்பை கைவிடாததால் தாயும், கணவரும் பெண்ணை கொலை செய்த சம்பவம், உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
--------
Related Tags :
Next Story