அனைத்து அரசியல் கட்சிகள்- மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து அரசியல் கட்சிகள்- மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2021 1:15 AM IST (Updated: 25 July 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை:
ஸ்டேன் சுவாமி இறப்புக்கு நீதி கேட்டு நெல்லையில் அனைத்து அரசியல் கட்சிகள்- மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் நேற்று மாலையில் அனைத்து அரசியல் கட்சிகள்- மக்கள் இயக்கத்தினர், மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம், மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் தலைமை தாங்கினார். ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் காஜா மொய்னுதீன், பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, சேகர குருக்கள் கிப்ட்சன், சில்வான் மற்றும் ஹென்றி ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

விசாரணை நடத்த வேண்டும்

ஆதிவாசிமக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டேன் சுவாமி இறப்பு குறித்து ஐ.நா.மனித உரிமை விசாரணை நடத்த வேண்டும். உபா சட்டத்தின்கீழ் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் உள்ள 15 மனித உரிமை போராளிகளையும் மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். தேசத்துரோக சட்டப்பிரிவுகளை உடனே நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட சிறுபான்மை நல குழு தலைவர் பழனி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலாளர் காசி விஸ்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ், எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது, மாவட்டத்தலைவர் கனி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் மற்றும் அலிப்பிலால், பொருணை மக்கள் இயக்க நாறும்பூநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story