கூட்டுறவு சங்கம் மூலம் விரைந்து கடன் வழங்க வேண்டும் கள்ளக்குறிச்சியல் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கூட்டுறவு சங்கம் மூலம் விரைந்து கடன் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சியல் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்
கள்ளக்குறிச்சி
குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஜூம் ஆப் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வேளாண்மை இணை இயக்குநர் ஜெகன்நாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை, வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வனம், பொதுப்பணி, நீர்வளம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அந்தந்த அலுவலகத்திலிருந்து ஜூம் ஆப் மூலம் கலந்து கொண்டனர்.
பயிர் கடன்
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஜூம் ஆப் மூலம் தங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.
அதன்படி உலர்களம், கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும். ஏரிகளில் தூர் வாரிடவும், பயிர் கடன் பெற்றுத் தரவும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் உடனடியாக முடித்துத்தரவும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்திடவும், அரியலூர் மற்றும் மரூர் ஏரிக்கு சாத்தனூர் கால்வாய் மூலம் தண்ணீர் வருவதற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும்.
கரும்பு நிலுவைத்தொகை
சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்திடும் கரும்புகளுக்கு கடன் பெற்றுத் தரவேண்டும். மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யவும், நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத்தரவும், புதிதாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு விரைந்து கடனுதவிகளை வழங்கவிடவும், புதியதாக வேளாண் தொழிற்சாலை அமைக்கவும், தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆகிய ஆறுகளை இணைத்திடவும், புதிதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்துத்தரவும், விவசாயிகளுக்கு தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கிடவும் வேண்டும்.
புதிய தொழில்நுட்பம்
கால்நடைகளுக்கு மருத்துவத்தில் புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவரவும், நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும். வேளாண்மை கல்லூரி, விதை சுத்திகரிப்பு நிலையம் அமைத்திடவும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பணம் பெற்றுத்தரவும், கரும்பு பயிரில் இடைக்கணு புழுவினை கட்டுப்படுத்திட ஒட்டுண்ணி நிலையம் திறந்திடவும், மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட தொழில் நுட்பம் தந்திடவும், வார காய்கறி சந்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் விவசாயிகளிடம் தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அன்பழகன், வசந்தா (நுண்ணீர் பாசனம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story