சவுடு மண் திருடிய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்


சவுடு மண் திருடிய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 26 July 2021 1:05 AM IST (Updated: 26 July 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே சவுடு மண் திருடிய பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவற்றை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே சவுடு மண் திருடிய பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவற்றை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

மணல் திருட்டு அதிகரிப்பு

மானாமதுரை பகுதியான கல்குறிச்சி, கீழபசலை, வேதியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு அடிக்கடி நடைபெற்று வருகிறது. இது குறித்து புகார் வந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றால் அங்கிருந்து மணல் கொள்ளையர்கள் தப்பி சென்று விடுகின்றனர். அதிகாரிகள் சோதனைக்கு கிளம்பி செல்வதை ஆங்காங்கே ஆட்களை வைத்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அதிகாரிகள் வருவதற்குள் அவர்கள் தப்பி சென்று விடுகிறார்கள்.
இந்த நிலையில் கீழமேல்குடி பகுதியில் ஒரு கும்பல் சவுடு மண் திருடுவதாக தாசில்தார் தமிழரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அவரது தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பொக்லைன், லாரி பறிமுதல்

வருவாய்த்துறையினரை பார்த்ததும் அங்கு மண் திருடி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். மண் திருடுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவற்றை தாசில்தார் பறிமுதல் செய்தார். பின்னர் அந்த வாகனங்கள் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தாசில்தார் கூறியதாவது:-
மணல் கொள்ளை, சவுடு மண் திருடுவது ஆகியவை சட்டப்படி விரோதம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா பகுதியில் மண் திருட்டை தடுக்க பொதுமக்களும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும். மணல் திருடுபவர்கள் மீது  சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story