பேரணாம்பட்டு அருகே சூதாட்டத்தில் அடகு வைக்கப்பட்ட 3 கார்கள் பறிமுதல்
பேரணாம்பட்டு அருகே சூதாட்டத்தில் அடகுவைக்கப்பட்ட 3 கார்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மாந்தோப்பை சூதாட்டத்துக்கு வாடகைக்கு விட்ட ஓய்வுபெற்ற மின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு
சூதாட்டம்
பேரணாம்பட்டு அருகே உள்ள கவுராப்பேட்டை, மொரசப்பல்லி ஆகிய வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்புகள் மற்றும் குடியாத்தம் தாலுகா பூங்குளம் ஆகிய இடங்களில் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் பிரபாகரன் என்ற இளையராஜா (வயது 35), அவரது உறவினர் கோழிப்பண்ணை ஆறுமுகம் (40) ஆகியோர் சூதாட்ட தொழிலை நடத்தி வந்துள்ளனர். இதற்காக தனிப்பிரிவு ஏட்டு முதல் போலீசார் லட்சகணக்கில் பணத்தை கொடுத்து வந்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள் சொகுசு கார்களில் கைத்துப்பாக்கிகளுடன் வந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சூதாட்ட த்தில் பந்தயத் தொகையாக தினமும் பல கோடி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
கடந்த 23-ந் தேதியன்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்த ஹார்டுவேர் கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் பேரணாம்பட்டு அருகே கவுராப்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் நடந்த சூதாட்டத்தில் கலந்து கொண்டு அதில் ஜெயித்த ரூ.25 லட்சம் பணத்துடன் தனது காரில் உளருக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது வாணியம்பாடி அருகே காரில் வந்த ஒரு கும்பல், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி சூதாட்ட தொழில் நடந்தது குறித்து நடவடிக்கை எடுக்காத பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ் ஆகியோர் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.
3 கார்கள் பறிமுதல்
பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் நடந்த சூதாட்டம் குறித்து வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் சூதாட்ட தொழிலை நடத்தும் கும்பலிடம் தங்களுடைய 4 கார்களை அடகு வைத்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து எர்த்தாங்கல், பூங்குளம் பகுதிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த 3 கார்களை திருப்பத்தூர் மாவட்ட தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாந்தோப்பு உரிமையாளர் கைது
பேரணாம்பட்டு டவுன் புண்ணாக்கி வீதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் (73) ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் எருக்கம்பட்டு மலையடிவாரத்தில் தனக்கு சொந்தமான மாந்தோப்பை, சூதாட்ட கும்பலுக்கு வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது. சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் மது குடித்து விட்டு மது பாட்டல்களை பக்கத்தில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வீசி ரகளையில் ஈடுபட்டு வந்தது குறித்து ராஜேஷ், நாகேஸ்வரனை தட்டி கேட்டுள்ளார்.
அதற்கு நாகேஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story