நீர்வரத்து வாய்க்கால்களில் குப்பை கழிவுகளை கொட்டாதீர்கள் கலெக்டர் ஸ்ரீதர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்


நீர்வரத்து வாய்க்கால்களில் குப்பை கழிவுகளை கொட்டாதீர்கள் கலெக்டர் ஸ்ரீதர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 July 2021 10:38 PM IST (Updated: 26 July 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்வரத்து வாய்க்கால்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாதீர்கள் என கலெக்டர் ஸ்ரீதர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்


கள்ளக்குறிச்சி

வாய்க்கால் தூர்வாரும் பணி

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பொதுப்பணித் துறையின் மூலம் பராமரிக்கப்படும் பெரிய ஏரி, சித்தேரி மற்றும் சித்தேரியின் வரத்து வாய்க்கால் ஆகியவற்றை கடந்த மாதம்(ஜூன்) 28-ந் தேதி ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் நீர் வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள சம்மப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறை மூலம் சித்தேரி வரத்து வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூர் வாரும் பணியினை விரைந்து முடித்திடவும், பெரிய ஏரியின் அருகே வாய்க்காலில் தூர்வாரும் பணிக்கு இடையூறாக உள்ளவற்றை அகற்றி மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பணிகளை முடித்திடவும், பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நீர் நிலை ஆக்கிரமிப்புகள்

மேலும் அவர் கூறும் போது, நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் வாய்க்கால்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி எறிய வேண்டாம். மழை நீரை முழுவதும் சேமிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். ஏதாவது ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் கணேசன், வினோதினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.





Next Story