கர்நாடகத்தில் நான் ஒருவனே பா.ஜனதாவை பலப்படுத்தினேன் - எடியூரப்பா உருக்கமான பேச்சு


கர்நாடகத்தில் நான் ஒருவனே பா.ஜனதாவை பலப்படுத்தினேன் - எடியூரப்பா உருக்கமான பேச்சு
x
தினத்தந்தி 26 July 2021 9:52 PM GMT (Updated: 26 July 2021 9:52 PM GMT)

என்னை தாக்கி இறந்துவிட்டதாக கூறி சென்றனர் என்றும், அதன்பிறகு கர்நாடகத்தில் நான் ஒருவனே பா.ஜனதாவை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டேன் என்றும் எடியூரப்பா உருக்கமாக கூறினார்.

பெங்களூரு:

ரூ.5 கோடி பரிசு

  கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்த விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

  கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு நான் இங்கு வந்துள்ளேன். டோக்கியா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள கர்நாடக வீரர்களுக்கு தங்கம் வென்றால் ரூ.5 கோடி, வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.3 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களின் வீரர்கள் தங்கம் வென்றால் ரூ.15 லட்சம், வெள்ளி வென்றால் ரூ.10 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

கடுமையாக தாக்கினர்

  சிகாரிபுரா தாலுகாவில் அந்த காலத்தில் பேச கூட 50 பேர் கிடைக்காத காலம் அது. பீதர், சிவமொக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் நான் பாதயாத்திரை மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டேன். நான் நிர்வாகிகளை அழைத்து கொண்டு கட்சியை பலப்படுத்தினேன். முதல் சட்டசபையில் நான் உள்பட 2 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தோம். அந்த ஒரு எம்.எல்.ஏ.வும் வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். நான் ஒருவனே கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டேன்.

  மண்டியா மாவட்டம் பூகனகெரேயில் பிறந்து சிவமொக்காவுக்கு வந்து சிகாரிபுராவில் எனது வாழ்க்கையை தொடங்கினேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கொள்கை பரப்பாளராக பணியாற்றினேன். புரசபையில் வெற்றி பெற்று அதன் தலைவராக பணியாற்றினேன். எனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும்போது ஒரு முறை என்னை கடுமையாக தாக்கினர். நான் செத்துவிட்டதாக விட்டு சென்றனர். ஆனால் அங்கு உயிர் பிழைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்தேன்.

50 ஆயிரம் விவசாயிகள்

  நான் சிறப்பான முறையில் கட்சி மற்றும் ஆட்சி பணிகளை செய்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. அன்றைய ஜனசங்க தாலுகா தலைவராக, மாவட்ட தலைவராக பணியாற்றினேன். விவசாயிகள், தலித் மக்களுக்கு ஆதரவாக போராடினேன். ஒரு முறை சிவமொக்காவில் 50 ஆயிரம் விவசாயிகளை சேர்த்து போராட்டம் நடத்தினேன். அதில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

  அதே போல் ஒரு முறை மகளிர் மாநாடு நடத்தினேன். அதில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். அவ்வாறு நான் பணியாற்றிய காரணத்தால் இன்று இந்த பதவியில் உள்ளேன். அன்று வாஜ்பாய் மத்திய மந்திரி பதவி வழங்குவதாக கூறினார். நான், தேசிய அரசியலுக்கு வருவது இல்லை என்று கூறிவிட்டேன். கர்நாடகத்தில் கட்சியை கட்டமைக்கும் பணியை மேற்கொள்வதாக கூறினேன்.

கட்சியை கட்டமைத்தேன்

  அந்த நேரத்தில் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது அதில் 300 பேர் கூட சேர மாட்டார்கள். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை கட்டமைத்தேன். இன்று கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. சிகாரிபுரா மக்கள் என்னை 7 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வைத்தனர்.

  இன்று பா.ஜனதா ஆட்சியில் இருக்க லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு காரணம். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி வழங்குவது இல்லை என்று ஒரு முடிவை எடுத்தனர். ஆனால் என் மீது வைத்திருந்த அக்கறையால் எனக்கு மேலும் 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிக்க அனுமதி வழங்கினர்.

தீவிரமாக பாடுபடுவேன்

  வரும் நாட்களில் மோடி, அமித்ஷா மீண்டும் ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிவமொக்காவில் கட்சியை கட்டமைப்புக்கு ஒரு கார் கூட இல்லை. மோட்டார் சைக்கிளில் சுற்றி கட்சியை பலப்படுத்தினேன். யாரும் இல்லாதபோது கட்சியை கட்டமைத்தேன். இன்று கட்சி பலமாக வளர்ந்துள்ளது. நாட்டிலேயே பா.ஜனதா பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

  பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) ஒப்பந்தப்படி நான் 2007-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். ஆனால் தேவேகவுடா குடும்பத்தினர் எனக்கு பல்வேறு நிபந்தனை விதித்தனர். அதனால் நான் பதவியை ராஜினாமா செய்தேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். ஆனால் ஒரு முறை கூட பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. வரும் நாட்களில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக நான் தீவிரமாக பாடுபடுவேன்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு

  நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் வெள்ளம் வந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவியது. நான் பதவி ஏற்ற முதலே அக்னி பரீட்சையை எதிர்கொண்டேன். ஆயினும் உங்களின் ஒத்துழைப்பால் நான் சிறப்பான முறையில் பணியாற்றினேன். தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட அனைத்து அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டியுள்ளது.

  நான் எனது சக்தி மீறி பணியாற்றி இருக்கிறேன். அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். மகிழ்ச்சியாக ராஜினாமா செய்கிறேன். எனக்கு எந்த துக்கம் இல்லை. பிரதமர் மோடி உள்ளிட்ட மேலிட தலைவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story