ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு மீன்கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 4 வாலிபர்கள் கைது


ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு மீன்கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 27 July 2021 9:57 PM IST (Updated: 27 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் பெட்ரோல் வீசியதில் மீன்கடைக்காரர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (வயது 55). இவர், ஆண்டிப்பட்டியில் மீன்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். 
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர்மநபர்கள் சிலர் பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அதில் தீ வைத்து ஜாகீர் உசேன் வீட்டில் வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் ஜாகீர்உசேனின் கால்கள் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. 
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள், காயமடைந்த ஜாகீர் உசேனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார், அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்  உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு விசாரித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். 
மேலும் இந்த வழக்கில் துப்புத்துலக்க ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரேசன் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் துரைராஜ், அசோக், ராஜ்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கொடுக்கல்-வாங்கல் தகராறு
போலீசார் நடத்திய விசாரணையில் ஆண்டிப்பட்டி சீதாராம்தாஸ் நகரை சேர்ந்த நவீன் (24), மேலத்தெருவை சேர்ந்த ஹரிகரசுதன் (19), குள்ளப்புரம் சந்து பகுதியை சேர்ந்த மணி (20), சக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (32) உள்பட 6 பேர் சேர்ந்து ஜாகீர் உசேன் வீட்டின் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. 
இதில் நவீன் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஜாகீன் உசேன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டனர். 
 4 பேர் கைது 
அதாவது, நவீனின் தந்தை அர்ஜுனன் மீன் கடை வைப்பதற்காக ஜாகிர் உசேனின் மனைவி இஷனாவிடம் ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அர்ஜுனன் திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 
இதனையடுத்து நவீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஜாகீர் உசேன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. அதன்பேரில் நவீன், ஹரிகரசுதன், மணி, கண்ணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மீன்கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
---
படங்கள்
-------------
காயமடைந்த ஜாகீர் உசேன்.
----
கைதானவர்களை படத்தில் காணலாம். 
------------

Next Story