கலெக்டர் அலுவலகத்துக்கு மீன்பிடி உபகரணங்களுடன் வந்தவர்களால் பரபரப்பு
இந்திய மீன்வள மசோதாவை திரும்ப பெறக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மீன்பிடி உபகரணங்களுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
இந்திய மீன்வள மசோதாவை திரும்ப பெறக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மீன்பிடி உபகரணங்களுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்வள மசோதா
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொது செயலாளர் சர்ச்சில் தலைமையில் ஏராளமான மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் மீன் பிடித்தல் மற்றும் மீன் வளர்த்தல் தொழிலில் 16 மில்லியன் மீனவர்கள் நேரடையாக மற்றும் இதன் இரண்டு மடங்கு மக்கள் மீன் சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டு உள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள இந்திய மீன்வள மசோதா இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்ய உள்ளது. அதாவது நிலப்பரப்பில் இருந்து 12 கடல் மைல் வரை அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்பு பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டு கடல் பகுதி என்று குறிக்கப்படுகிறது.
திரும்ப பெற...
கடல் மண்டல சட்டமானது இந்திய மீனவர்கள் சிறப்பு பொருளாதார கடல் அதாவது 200 கடல் மைல் வரை மீன்பிடிக்க அரசிடமிருந்து அனுமதி பெற தேவை இல்லை என கூறுகிறது. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக் கூடாது என்றும், கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், மீன்பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த மசோதா மூலம் 12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உள்ளூர் பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.
பாரம்பரிய மீனவர்கள் மீன் வரும் திசையை பார்த்தும், மீன் இனம் அறிந்தும் அதற்கு ஏற்ற வலை, தூண்டில் ஆகியவற்றை பயன்படுத்தி கிடைக்கின்ற மீனை பிடித்து வருகிறார்கள். புதிய மசோதாவானது எப்போது மீன்பிடிக்க போவது, எந்த வகை மீனை பிடிப்பது, எத்தனை கிலோ மீன் பிடிப்பது, எந்த கடல் பகுதியில் மீன் பிடிப்பது, எந்த வகையான வலை மற்றும் தூண்டிலை மீன் பிடிக்க பயன்படுத்துவது என்று ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அதிகாரியிடம் இருந்து எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய மீன்வள மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீன்பிடி கருவிகள்
முன்னதாக மனு அளிக்க வந்தவர்கள் மரத்தால் செய்யப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உடன் கொண்டு வந்திருந்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை திரும்ப பெறவில்லை என்றால், தங்களது விசைப்படகு, நாட்டு படகு, கட்டுமரம், வலைகள், தூண்டில் ஆகியவைகளை அரசிடமே ஒப்படைக்க வேண்டிவரும் என்பதை கூறும் விதமாக அவற்றை கொண்டு வந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மீனவர்கள் கொண்டு வந்த மீன்பிடி கருவிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து அவற்றை வெளியே வைத்து விட்டு வந்து மனு அளித்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story