கெங்கவல்லி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு நீச்சல் தெரிந்தும் உயிரிழந்த பரிதாபம்


கெங்கவல்லி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு நீச்சல் தெரிந்தும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 28 July 2021 2:11 AM IST (Updated: 28 July 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே நீச்சல் தெரிந்தும் கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கெங்கவல்லி
கெங்கவல்லி அருகே நீச்சல் தெரிந்தும் கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
8-ம் வகுப்பு மாணவன்
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஊராட்சியில் வசிப்பவர் கணேசன். விவசாயியான இவர், தனது தோட்டத்தில் மாட்டுக்கு நேற்று முன்தினம் மாலையில் புல் அறுக்க சென்றார். அப்போது அவருடைய மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் பாஸ்கரும் (வயது 13) உடன் சென்றான்.
பாஸ்கர், கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறினார். கணேசனும் சரி என்று கூறிவிட்டு அவரது வேலையை பார்த்தார். குளித்து விட்டு மகன் வீட்டுக்கு சென்று இருப்பான் என நினைத்து கணேசன் வீட்டுக்கு வந்தார். அங்கு மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
கிணற்றுக்குள் பிணம்
உடனே தோட்டத்துக்கு வந்தார். அங்கு மகனின் ஆடைகள் கிணற்றில் அருகில் கிடந்தது. மகன் கிணற்றுக்குள் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த கணேசன், இதுதொடர்பாக கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு மழை பெய்ததால் பாஸ்கரை தேடும் பணியில் தொய்வுஏற்பட்டது.
இதையடுத்து நேற்று காலையில் 5 மின்மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். அப்போது சிறுவன் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தான். அவனது உடலை மீட்டனர். தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
நீச்சல் தெரிந்தும் சாவு
இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதாவது, கொடி போன்று படர்ந்துள்ள பாசியானது, மாணவனின் காலில் சுற்றி உள்ளது. இதனால் நீச்சல் தெரிந்தும் சிறுவனால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரிய வந்தது.
மாணவனின் உடலை பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Related Tags :
Next Story