78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்


78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
x
தினத்தந்தி 28 July 2021 9:25 PM GMT (Updated: 28 July 2021 9:25 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை கலெக்டர் வழங்கினார்.

திண்டுக்கல்: 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 

இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு அடையாள அட்டை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்பட்டன.


இதையடுத்து திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. அப்போது பலர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதன்பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு 78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார்.


முன்னதாக கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள 222 திருநங்கைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் அடிப்படை தேவைகள் குறித்து மனு கொடுத்தால் நிறைவேற்றி தரப்படும். அதோடு தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை, இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பலதா, வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story