தரமற்ற விதைகளால் நெற்பயிர்கள் பாதிப்பு: இழப்பீடு கேட்டு வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
தரமற்ற விதைகளால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் இழப்பீடு கேட்டு வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர் திருக்கை, அனுமந்தபுரம், கொசப்பாளையம், அடுக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் விதைப்பண்ணையில் இருந்து விதை நெல் வாங்கி, சாகுபடி செய்தனர். ஆனால், இதுநாள் வரை அந்த பயிர்களில் கதிர்வரவில்லை.
தரமற்ற விதை நெல் வழங்கியதாக கூறி, அந்த பண்ணை உரிமையாளர்களிடம் விவசாயிகள் முறையிட்ட போது, சிலருக்கு மட்டும் இ ழப்பீட்டு தொகை வழங்கி உள்ளனர். இழப்பீட்டு தொகை கிடைக்காத 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மாலை கதிர்களே வராத நெற்பயிருடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், விதைச்சான்று அதிகாரிகளை சந்தித்து இழப்பீடு கேட்டு முறையிட்டனர். இதை கேட்டறிந்த அதிகாரிகள், நாளை (அதாவது இன்று) பகல் 12 மணிக்குள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story