தமிழகத்தில், நடப்பாண்டு மனித உரிமை ஆணையத்தில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு; நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பேட்டி


தமிழகத்தில், நடப்பாண்டு மனித உரிமை ஆணையத்தில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு; நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 30 July 2021 6:10 AM IST (Updated: 30 July 2021 6:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில், நடப்பாண்டு மனித உரிமை ஆணையத்தில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தில், நடப்பாண்டு மனித உரிமை ஆணையத்தில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணையம்

தமிழகத்தில் மனித ஊரிமைகள் மீறல்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து மாவட்ட வாரியாக சென்று ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல் குறித்த புகார்களை விசாரிக்க மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயசந்திரன் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி திருச்சி மாவட்டத்தில் நிலப்பிரச்சினை, பட்டா வழங்க மறுத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் பல வக்கீல்கள் மற்றும் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

51 வழக்குகளுக்கு விசாரணை

திருச்சி மாவட்டத்தில் 51 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றுல் 25 வழக்குகளில் உறுப்பினர்களை அழைத்து விசாரித்து பதில் தரும்படி கேட்டுள்ளோம். எஞ்சிய வழக்குகளில் 2 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆணையத்திற்கு 70 முதல் 100 வரையிலான மனுக்கள் வருகின்றன. 

அதுமட்டுமன்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக முக்கிய சம்பவங்கள் குறித்து ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருவதுடன், தீர்வு காணப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை மீது புகார்

சில வழக்குகள் பாதிக்கப்பட்ட நபர்களால் ஐகோர்ட்டில் தடை ஆணை பெறுவதால் இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. ஆணையத்திற்கு காவல்துறையின் மீது அதிகமான புகார்கள் வருகின்றன. 

இதில் பாதி வழக்குகள் பொய்யான வழக்குகளாகவே உள்ளன. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையின் மீது ஆணையத்திடம் புகார் அளிக்கின்றனர். 

இழப்பீட்டு தொகை

முறையான விசாரணை செய்து பொய்யான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதனை தள்ளுபடி செய்து நியாயமான நீதி வழங்க கூடிய நிலையில் ஆணையம் உள்ளது. இதுவரை 341 வழக்குகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையினரை அடுத்து வருவாய்த் துறையினர் மீதும் புகார்கள் அதிகம் உள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய இழப்பீடுகள் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டு, அரசும் இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் ஆணையத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,

13 ஆயிரம் வழக்குகள்

முன்பு 6 ஆயிரம் புகார்கள் வந்த நிலையில், தற்போது 12 ஆயிரம் வருகின்றன. நடப்பாண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடத்தில் மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அசம்பாவிதம், அதிகாரிகள் அத்துமீறல் குறித்தும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளிவந்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story