காட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 July 2021 7:33 PM GMT (Updated: 30 July 2021 7:33 PM GMT)

நாங்குநேரி அருகே காட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே ஆழ்வார்குளம் காட்டு பகுதியில் ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சிலர் இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் நாங்குநேரியைச் சேர்ந்த முருகன் (வயது 46) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் சிலர் தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், முருகன் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக ரேஷன் அரிசியை சேகரித்து கேரளாவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது தெரிய வந்தது.

Next Story