பிளஸ்-2 சிறப்பு தேர்வை எழுத 356 மாணவர்கள் விண்ணப்பம்


பிளஸ்-2 சிறப்பு தேர்வை எழுத 356 மாணவர்கள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 31 July 2021 2:21 AM IST (Updated: 31 July 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 சிறப்பு தேர்வை எழுத 356 மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர்.

பெரம்பலூர்:

பிளஸ்-2 மதிப்பெண்
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு கடந்த 19-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு  எழுத விண்ணப்பித்திருந்த 74 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 904 மாணவர்களும், 4 ஆயிரத்து 29 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 933 பேரும், அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 82 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 29 மாணவர்களும், 4 ஆயிரத்து 679 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 708 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் தற்காலிகமாக மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பித்தனர்
இந்நிலையில் பிளஸ்- 2 மாணவ-மாணவிகளுக்கு அரசு கணக்கிட்டு வழங்கிய மதிப்பெண்களில் திருப்தி இல்லையென்றால், சிறப்பு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. ஆனால் சிறப்பு தேர்வில் அனைத்து பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும் என்றும், அதில் பெறும் மதிப்பெண் இறுதி மதிப்பெண்ணாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் மாணவ -மாணவிகள் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி பிளஸ்-2 சிறப்பு தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 129 பேரும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 27 பேரும் என மொத்தம் 156 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 சிறப்பு தேர்வை எழுத மொத்தம் 200 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான சிறப்பு தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. தேர்வினை எழுத மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
தேர்வு நடைபெறும் இடங்கள்
இதில் பெரம்பலூர் கல்வி மாவட்டத்துக்கு பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்துக்கு குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடைபெறவுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் கல்வி மாவட்டத்துக்கு அரியலூர் மான்போர்ட்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், செந்துறை கல்வி மாவட்டத்துக்கு செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்துக்கு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு தேர்வு நடைபெறவுள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story